உலகின் தூய்மையான நாடாக இந்தியாவை உருவாக்கும் பெரிய குறிக்கோளுடன் நாட்டின் அனைத்து இளைஞர்களும் முன்னேற வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் இன்று (ஜனவரி 11, 2024) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தூய்மை ஆய்வு விருதுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர்,
பரந்த பங்கேற்புடன் நடத்தப்படும் தூய்மை ஆய்வு, தூய்மையின் அளவை உயர்த்துவற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகும் என்றார்.
‘தூய்மையிலிருந்து செழிப்பு’ என்ற பாதையில் முன்னேறிச் சென்றதற்காக அனைவரையும் அவர் பாராட்டினார். தூய்மைப் பிரச்சாரங்கள் பெண்களின் பொருளாதாரத் தற்சார்புக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்பதைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைந்தார்.
நமது தூய்மை இயக்கத்தின் முன்கள வீரர்களாக நமது தூய்மை உறவினர்கள் உள்ளனர் என்று கூறினார். அவர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நலனை உறுதி செய்ய பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது கண்டு அவர் மகிழ்ச்சியடைந்தார். தூய்மை இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்ட கழிவு மேலாண்மையில் மறுசுழற்சி என்பது நிலையான வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
கழிவுகளிலிருந்து செல்வம் என்ற கருத்தாக்கத்தை நாம் ஆழமாக ஆராய்ந்தால், அனைத்தும் மதிப்பு வாய்ந்தவை, எதுவும் வீண் அல்ல என்பது தெளிவாகிறது எனக் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார்.
இந்த முற்போக்கான சிந்தனை, பசுமைக் கழிவுகளிலிருந்து உயிரிவாயு தயாரிக்கவும், கழிவுகளிலிருந்து பெறப்பட்ட எரிபொருளிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுகிறது.
மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர் என்று குறிப்பிட்டவர், பெருமளவிலான நகர்ப்புற நிலங்கள் குப்பைமேடுகளுக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன என்றார்.
இதுபோன்ற குப்பை மேடுகள் நகர்ப்புற மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று கூறிய அவர், இவை அகற்றப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
இளம் தலைமுறையினர் அனைத்து நகரங்களையும் முழு நாட்டையும் சுத்தமாக வைத்திருக்க முடிவு செய்தால், 2047 ஆம் ஆண்டின் இந்தியா நிச்சயமாக உலகின் தூய்மையான நாடுகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டு அதன் சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும் என்று கூறினார்.
உலகின் தூய்மையான நாடாக இந்தியாவை உருவாக்கும் பெரிய குறிக்கோளுடன் நாட்டின் அனைத்து இளைஞர்களும் முன்னேற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.