டிசம்பர் 29 ஆம் தேதி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஓடிடி தளத்தில் ரிலீஸான நயன்தாராவின் அன்னபூரணி படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ‘அன்னபூரணி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வந்தது.
இப்படம் டிசம்பர் 29 ஆம் தேதி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஓடிடி தளத்தில் ரிலீஸானது. மேலும் இப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இந்த திரைப்படத்தில் இந்த மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
அதாவது படத்தில் சிறந்த சமையல் கலைஞராக நடிகை நயன்தாரா மாற நினைப்பார். அவர் சிறந்த சமையல் கலைஞராக மாறினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் முடிவு.
இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. நடிகர் நயன்தாரா-ஜெய் இடையேயான ஒரு காட்சியில் நடிகர் ஜெய் கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டார் என கூறியுள்ளார்.
அதாவது ‛‛ராமாயணத்தை வால்மீகி எழுதியுள்ளார். அதில் வனவாசத்தின்போது ராமன், லட்சுமணன் ஆகியோர் வேட்டையாடிய உணவை சீதாவுடன் சாப்பிட்டனர். அதனால் ராமன் விஷ்ணுவின் அவதாரம் இல்லை என சொல்லி விட முடியுமா?’’ என்பன போன்ற வசனங்கள் இடம்பெற்றிருந்தது.
அதோடு அர்ச்சகரின் மகளாக இருந்து கொண்டு நமாஸ் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை எல்டி பார்க் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய், இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஜாதின் சேதி ரவீந்திரா புனித் கோனேகா ஜீ ஸ்டியோஸ் தலைமை அதிகாரி ஷாரிக் படேல், நெட்பிளிக்ஸ் இந்திய தலைமை அதிகாரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரை தொடர்ந்து தற்போது மும்பை போலீசார் அன்னபூரணி படத்துக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான அன்னபூரணி படம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட சர்ச்சை காட்சிகளை நீக்கும் வரை அப்படத்தை நீக்குவதாக உறுதியளிக்கிறோம் என ஓடிடி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதோடு மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றது தொடர்பாக படத்தை தயாரித்த ஜீ நிறுவனம் விஷ்வ இந்து அமைப்பிடம் மன்னிப்பு கோரி உள்ளது.