பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் குறைந்த விலையில் வாங்கும் வகையில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விழாக் காலங்களில் சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். இந்த சந்தையில் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.
இந்த ஆண்டுக்கான சிறப்பு சந்தை கோயம்பேடு மார்கெட்டின் பின்புறத்தில் உள்ள ஏ சாலை மற்றும் மளிகை மார்க்கெட் வளாகம் என இரண்டு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று பொங்கல் சிறப்பு சந்தை தொடங்கியது.
பொங்கல் சிறப்பு சந்தையில் விற்பனை செய்வதற்கு கரும்பு, வாழைக்கன்று, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட பல பொருட்கள் வந்து இறங்கி உள்ளன. இங்கு மொத்த விலை, சில்லறை விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.