இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முறியடிக்கவுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பல சாதனைகளை படைத்துள்ளார். அதில் சிறந்த சாதனையாக பார்க்கப்படுவது டி20 கேப்டனாக அதிக வெற்றிகள் பெற்றுக் கொடுத்தது தான்.
அந்த சாதனையை ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ரோகித் சர்மா சமன் செய்ய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. தோனி 72 சர்வதேச டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு அதில் 42 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்திய கேப்டன்கள் பெற்ற வெற்றிகளின் பட்டியலில் தோனி முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் ரோகித் சர்மா 51 போட்டிகளில் 39 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தான் அணி டி20 போட்டிகளில் சற்று வலுவான அணி என்ற போதிலும் இந்தியா முழு பலத்துடன் இந்த தொடரில் களமிறங்க உள்ளதால் மூன்று போட்டிகளையும் வென்று தொடரை வெல்ல வாய்ப்பு உள்ளது.
ரோகித் சர்மா நீண்ட இடைவெளிக்கு பின் டி20 அணிக்கு திரும்பி இருக்கிறார். அவரே இந்த மூன்று போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பார் எனவே, அவர் தோனியின் சாதனையை இந்த தொடரிலேயே சமன் செய்ய வாய்ப்பு உள்ளது. தோனி மற்றும் ரோஹித் சர்மா 42 வெற்றிகளுடன் இருப்பார்கள்.
சர்வதேச அளவில் அதிக டி20 போட்டிகளில் வெற்றி தேடித் தந்த கேப்டன்கள் பட்டியலில் தோனி உட்பட ஐந்து கேப்டன்கள் 42 வெற்றிகளுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் அஸ்கார் ஆப்கன், பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், இங்கிலாந்து அணியின் இயான் மார்கன், உகாண்டா அணியின் பிரையன் மசாம்பா ஆகியோர் 42 வெற்றிகளை பெற்று தோனியுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தொடரின் மூன்று போட்டிகளையும் வென்றால் ரோகித் சர்மாவும் இந்த வரிசையில் முதல் இடத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம், கேப்டன் ரோஹித் சர்மாவின் வெற்றி சதவீதம் தான், அவர் கேப்டனாக 76.74 சதவீத வெற்றியை பெற்றுத்தந்துள்ளார். இந்திய அளவில் அடுத்த இடத்தில் இருக்கும் விராட் கோலி 60 சதவீத வெற்றி மட்டுமே பெற்றுள்ளார்.