வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வஞ்சூர் மற்றும் கீழ் ஆலத்தூர் ஆகிய கிராமங்களில் இன்று நடைபெற்ற நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே. சிங் கலந்துகொண்டு 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ 1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான மத்திய அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் வி.கே. சிங்,
நமக்குக் கிடைக்கும் வசதிகளைவிட நமது வருங்கால சந்ததியினருக்கு இன்னும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டுமென்று பிரதமர் மோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார்.
இந்தியாவில் எவ்வித ஏற்றத்தாழ்வுகளுக்கும் இடமில்லை என்றும், நம் நாட்டில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் ஆகியோரின் முன்னேற்றத்தில்தான் தேசத்தின் முன்னேற்றம் அடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார். வேலூர் மாவட்டத்திலுள்ள 247 கிராமங்களில் இதுவரை 169 கிராமங்களை இந்த மோடி அரசின் உத்தரவாத வாகனம் சென்றடைந்துள்ளது.
இதன் மூலம் மத்திய அரசின் நலத்திட்டங்கள் அனைத்து கிராமங்களையும் அவரவர் இருக்குமிடங்களுக்கே கொண்டுசெல்கிறது என்றும், விரைவில் எஞ்சியுள்ள கிராமங்களையும் இந்த லட்சிய பயண யாத்திரை வாகனம் சென்றடையும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் பசியுடன் யாரும் இருக்கக் கூடாது என்பதற்காக பாரதப் பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என்றும், அனைவருக்கும் வீடு, கழிப்பறை, இலவச எரிவாயு, ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். மேலும் சாலையோர ஏழை வியாபரிகளுக்கு எவ்விதப் பிணையுமில்லாமல் 10 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை தொழில்புரிய கடன்கள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் முத்ரா திட்டத்தின் பயனாளிகளில் 60%-க்கும் மேல் பெண்கள் என்றும் இது தொழில்முனைவில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
நம்முடைய பங்களிப்பில்லாமல் நமது நாடு வளர்ச்சியடைந்த நாடாக முடியாது என்றும், நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் பங்களிப்புடன் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களையும் இந்த லட்சியப் பயண வாகனம் சென்றடைந்து இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக்கும் கடமை அனைவருக்கும் உள்ளது என்பதை எடுத்துரைக்கிறது என்றார்.
நாட்டில் ரயில் இணைப்பு, சாலை வசதிகள், நீர்வழிப்பாதைகள் மற்றும் விமான நிலையங்கள் அனைத்தும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர், இவையனைத்தும் மோடி அரசின் உத்தரவாதம் என்று தெரிவித்தார்.
பின்னர் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் செயல்விளக்கத்தைப் பார்வையிட்டதுடன் கீழ் ஆலத்தூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் உணவுப் பாதுகாப்புத் துறையின் மேலாளர் ஜி கணேஷ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவலர் ஆர் மிதுன், மாவட்ட முன்னோடி வங்கியின் அலுவலர் ஜமால், நபார்டு வங்கியின் அலுவலர் அருண் விஜய் மற்றும் அஞ்சல் துறையின் அலுவலர் நேதாஜி ஆகியோர் கலந்து கொண்டு அந்தந்த துறைகளைச் சேர்ந்த திட்டங்களின் பயன்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.