சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இலாகா இல்லாத அமைச்சர் என்று ஏழு மாதமாக மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எனத் தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை மேட்டூர் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
2000 ஆண்டுகள் பழமையான காட்டுவீர ஆஞ்சநேயர், இந்தப் பகுதி மக்களின் வீரத்தையும், உறுதியையும் எடுத்துரைக்கிறார். காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில், அவதானப்பட்டி மாரியம்மன் கோவில், காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோவில், பெரிய மாரியம்மன், கணவாய்ப்பட்டி பெருமாள் கோவில் என பழம்பெரும் கோவில்கள் சூழ்ந்த பகுதி கிருஷ்ணகிரி.
சேர, சோழ மன்னர்களின் வலிமையான பகுதியாகவும், பின்னாட்களில் இந்துப் பேரரசை அமைத்த விஜயநகரப் பேரரசின் கோட்டையாகவும் இருந்தது. ஓசூர்-தருமபுரி இடையே தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.1,331 கோடி செலவிடுகிறது நமது மத்திய அரசு.
தமிழகத்திற்கு மோடி அவர்கள் கொடுத்த 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று கிருஷ்ணகிரிக்கு வழங்கப்பட்டுள்ளது. 27,213 பேருக்கு பிரதமரின் வீடு, 2,20,188 வீடுகளில் குழாய் மூலம் குடிநீர், 2,45,579 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,10,425 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,08,623 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,54,588 விவசாயிகளுக்கு வருடம் 6,000 ரூபாய், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 4,403 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ள திட்டங்கள் ஏராளம்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட கர்மவீரர் காமராஜர் அவர்களால் கட்டப்பட்ட கிருஷ்ணகிரி கேஆர்பி அணை மூலம் இந்தத் தொகுதியில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த அணையை கட்டி 66 ஆண்டுகள் ஆனதையொட்டி, இந்தப் பகுதி விவசாயிகள் காமராஜர் சிலையை, கேஆர்பி அணையில் அவரது நினைவாக வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். திமுக அரசு அந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
திமுக கட்சி தொடங்கிய நாள் அன்று, சென்னை ராபின்சன் பூங்காவில் 26 பேர் பேசினார்கள். அதில் கருணாநிதி பெயர் மட்டும்தான் நமக்குத் தெரியும். மீதமுள்ள 25 பேர் பெயர் யாருக்காவது நினைவிருக்கிறதா? குடும்ப அரசியலால் எந்தத் தகுதியுமே இல்லாமல் ஒரு கூட்டம் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது.
தென் தமிழக மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட போது, முதலமைச்சர் டெல்லியில் இந்தி கூட்டணி பேச்சுவார்த்தையில் இருக்கிறார். வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட, மூத்த அமைச்சர்களை அனுப்பாமல், விளையாட்டுத் துறை அமைச்சரான தனது மகனை முன்னிறுத்துகிறார்.
தகுதி இல்லாதவர்கள் தாங்கள் தலைவர்களாக நீடிக்க, தகுதி இல்லாதவர்களையே தங்களைச் சுற்றி நியமிப்பார்கள். இதனால்தான் தமிழக நிர்வாகம் சீர்குலைந்து போய்க் கொண்டிருக்கிறது.
சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இலாகா இல்லாத அமைச்சர் என்று ஏழு மாதமாக மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பட்டியல் சமூக பஞ்சாயத்துத் தலைவர்கள் தேசியக் கொடியேற்ற முடியாது.
வன்கொடுமை, ஜாதிக் கலவரங்கள் அதிகமாக நடக்கும் மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது. தேசத் தலைவர்கள் அனைவரையும் ஜாதித் தலைவர்களாக்கி வைத்திருக்கிறார்கள். ஜாதியை ஒழித்தோம் என்ற பெயரில் ஜாதியை வளர்த்து, ஐம்பதாண்டு காலமாக ஜாதி அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக.
பாஜக கட்சி சரித்திரத்தில், பிரதமர் வேட்பாளரை அறிவித்து தேர்தலைச் சந்தித்தது கிடையாது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெயரைத்தான் முதன்முதலாக பிரதமராக அறிவித்து 2014 ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்தது. கடந்த பத்து ஆண்டுகளாக, ஊழலற்ற, நேர்மையான, மக்கள் நலன் போற்றும் ஆட்சி மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் 75 அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
ஒருவர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு வைக்க முடியாது. காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 ஐ நீக்கியதன் மூலம், நமது காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் இருந்து தப்பித்து இருக்கிறது. சமூக நீதிக்கு இந்தியாவில் இரண்டு தலைவர்களைத்தான் உதாரணமாகக் கூற முடியும். கர்மவீரர் காமராஜர் மற்றும் பாரதப் பிரதமர் மோடி அவர்கள்.
கர்மவீரர் காமராஜர் அவர்களைப் போலவே, நமது பிரதமர் அமைச்சரவையில் 80% இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர். மோடி அவர்கள் வந்தால்தான், தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும்.
மோடி அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறினால், நமது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்த காங்கிரஸ் 2019 தேர்தலில் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது.
திமுக இருக்கும் ஊழல் இந்தி கூட்டணியில், பிரதமர் வேட்பாளர் யார் என்று முதலமைச்சர் ஸ்டாலினால் கூற முடியுமா? காங்கிரஸ் மூத்த தலைவர் கார்த்தி சிதம்பரமே, நமது பிரதமர் மோடியை எதிர்க்க வேறு எந்தத் தலைவர்களும் இந்தியாவில் இல்லை என்று கூறியிருக்கிறார்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நேர்மைக்கு, ஆளுமைக்கு, இந்தியாவின் எதிர்காலத்திற்காக தமிழகமும் வாக்களிக்க வேண்டும்.
பாஜக போட்டியிடும் தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் மோடி அவர்களே போட்டியிடுகிறார் என்று கருதி, மக்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். ஊழலற்ற, நேர்மையான, மக்கள் நலன் சார்ந்த, புதிய அரசியல் சகாப்தத்தை தமிழகத்தில் எழுதுவதற்கான நேரம் வந்து விட்டது எனத் தெரிவித்தார்.