ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து சரமாரி தாக்குதலை நடத்தி உள்ளன.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், செங்கடல் வழியாக செல்லும், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலைத் தடுக்க, அங்கு அமெரிக்கா போர் கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது. இந்த கப்பல்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உள்ள இடங்களைக் குறிவைத்தும், ஆயுத கிடங்குகளைக் குறிவைத்தும் இருநாடுகளும் சரமாரி தாக்குதலை நடத்தி உள்ளன. இந்த ஒருங்கிணைந்த இராணுவ தாக்குதலில் போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் ஈடுபட்டுள்ளன.
செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.