உலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரதம் மற்றும் கார் பேரணிகளும் நடைபெறுகிறது.
இந்துக்களின் ராமர் கோவில் கனவு 500 ஆண்டுகளுக்கு பின் நினைவாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பகவான் ஸ்ரீராமரின் பக்தர்கள் இந்த விழாவைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இந்த நூற்றாண்டின் உலகளாவிய நிகழ்வாக அமையவுள்ளது.இந்த நிகழ்வு ஏற்கனவே உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அயோத்தியில் நடக்கும் நிகழ்வை அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கம் முதல் ஐரோப்பாவில் உள்ள ஈபிள் டவர் வரை பலர் கண்டுகளிப்பார்கள். பாரிஸில், ஐரோப்பா முழுவதிலும் இருந்து பங்கேற்பாளர்களை ஈர்க்கும் பிரமாண்டமான ராம ரத யாத்திரை ஜனவரி 21 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஈபிள் கோபுரம் அருகே விழாக்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
கனடா உட்பட வட அமெரிக்கா முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது. கலிபோர்னியா, வாஷிங்டன், சிகாகோ போன்ற நகரங்களிலும், அமெரிக்காவின் பிற இடங்களிலும் மாபெரும் கார் பேரணிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன.
நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இதற்கு முன், ஆகஸ்ட் 5, 2020 அன்று, ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவின் போது, டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோயில் கொண்ட டிஜிட்டல் விளம்பரப் பலகை காட்டப்பட்டது.
நியூயார்க் நகரில் உள்ள இந்து சமூகத்தை கவனிக்கும் போது இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அவர்களின் ஆன்மிகத்தைக் கொண்டாடுவதற்கும், உயர்த்துவதற்கும் இது ஒரு முக்கியமான வாய்ப்பாகப் பார்க்கிறேன் என நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.