இடைக்கால பட்ஜெட்டால் பண வீக்கம் அதிகரிக்காது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ஊடக நிறுவனம் சார்பில் நிதி, காப்பீட்டுத்துறை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸிடம், அமெரிக்காவில் பங்குச் சந்தை சார்ந்த இ.டி.எஃப். முதலீட்டில் கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான பிட்காயின் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “பிற நாட்டு பொருளாதாரத்துக்கும், பங்குச் சந்தைக்கும் உகந்ததாக இருக்கும் சில விஷயங்கள் நமது நாட்டுக்கும் சிறப்பான பலனைத் தரும் என்று கூறிவிட முடியாது. எனவே, இந்தியாவில் கிரிப்டோகரன்சி தொடா்பாக ஏற்கெனவே உள்ள தடை தொடரவே வாய்ப்பு இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்த கேள்விக்கு பதிலளித்த சக்திகாந்த தாஸ், “மத்திய அரசின் முந்தைய இடைக்கால பட்ஜெட்களை வைத்துப் பார்க்கும்போது, தற்போதைய இடைக்கால பட்ஜெட்டால் பணவீக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் எவ்வித தொய்வும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய பிறகு உள்நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக உணவு சார்ந்த பல்வேறு பொருள்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவித்திருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.