இந்தியாவின் சாதனைகளுக்குப் பின்னால் இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்த அமிர்தகாலம் நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு பொற்காலம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
மும்பையில் கட்டப்பட்டிருக்கும் மிகநீளமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் பாலத்தை திறந்து வைப்பதற்காகவும், நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் தினவிழாவைத் தொடங்கி வைக்கவும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்றிருக்கிறார்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஹோட்டல் மிர்ச்சி சௌக்கில் இருந்து சுவாமி மஹாராஜ் சௌக் வரை பிரதமர் மோடி காரில் பேரணியாகச் சென்றார். உடன், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் சென்றனர்.
வழிநெடுகிலும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக மோடியை வரவேற்றனர். மேலும், கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இப்பேரணி சுமார் 35 நிமிடங்கள் வரை நீடித்தது. பின்னர், கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ராம்குந்துக்கு பிரதமர் மோடி சென்றார்.
அங்கு பூஜை செய்து, ஆரத்தி காண்பித்து வழிபாடு நடத்தினார். பிறகு, மடாதிபதிகளையும் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, பஞ்சவடி பகுதியில் உள்ள காலாராம் கோவிலிலும் பிரதமர் மோடி வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்தார். பிறகு, நாஷிக்கில் 27-வது தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “மகாராஷ்டிரா மாநிலம் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க நபர்களுடன் தொடர்புடையது. கடவுள் இராமர் பஞ்சவடி பகுதியில்தான் தங்கியிருந்தார். இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில், வழிபாட்டு தலங்களில் தூய்மைப்பணியை மேற்கொள்ளும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இளைஞர் சக்தி காரணமாக, இந்தியா முதல் 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த சக்திதான் நமது பலம். விரைவில் நாம் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவோம். திறமையான தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தியாவை உலகம் பார்க்கிறது. அதோடு, இந்தியாவில் குறைந்த விலையில் இணைய சேவை கிடைப்பது உலக மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் தூதர்களாக இந்திய இளைஞர்கள் மாறி இருக்கிறார்கள். உலகின் முதல் 3 ஸ்டார்ட் அப் அமைப்புகளில் இந்தியாவும் உள்ளது. இந்தியா புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறது. இந்தியா சாதனை காப்புரிமைகளை தாக்கல் செய்கிறது. இதற்கெல்லாம் பின்னால் நாட்டின் இளைஞர்கள் இருக்கிறார்கள். அமிர்தகாலம் நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு பொற்காலம்.
இன்று ஒவ்வொரு பகுதியிலும் முந்தைய அரசாங்கங்களை விட, 2 மடங்கு வேகத்தில் பணிகள் நடக்கின்றன. மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, இந்தியாவிலும் இதுபோன்ற துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் இருக்கிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள். தொழில்நுட்பத் துறையில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. மால்கள் முதல் சிறிய கடைகள் வரை யு.பி.ஐ. பயன்படுத்தப்படுவதைப் பார்த்து உலகமே வியக்கிறது” என்றார்.