ஜனவரி 26-ம் தேதி அன்று குடியரசு தினம் அன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1994 -ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 3-ன் படி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், அந்த கிராம ஊராட்சிப் பகுதியில் வாக்காளர்களாகப் பதிவு செய்த அனைவரும் கலந்து கொள்ளலாம். பொது மக்கள் நேரடியாக ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்பதால், கிராமத்திற்கு தேவையான வளர்ச்சிப் பணிகள் விரைவாக செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், ஜனவரி 26-ம் தேதி, குடியசு தினம், மே 1-ம் தேதி தொழிலாளர் தினம், ஆகஸ்ட் -15 சுதந்திர தினம், அக்டோபர் 2 -ம் தேதி காந்தி ஜெயந்தி, நவம்பர் 1-ம் தேதியான உள்ளாட்சி நாள் ஆகிய சிறப்பு நாட்களின்போது, தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சி மன்றங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இதனிடையே, வரும் ஜனவரி 26-ம் தேதி அன்று குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அன்றை தினம் தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், கிராம சபை கூட்டங்களை நம்ம கிராம சபை செயலியில் உள்ளீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், கிராம சபை கூட்டத்துக்கான செலவுகளுக்கான உச்பட்ட தொகை வரம்பாக, ரூ.5,000 -ஆக உயர்த்தியுள்ளது.
கிராம சபை கூட்டத்தைப் பொறுத்தவரை, அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். முதலமைச்சரே வந்தாலும் கிராம சபை கூட்டத்தில் தரையில்தான் அமரவேண்டும் என்பது அரசு விதி.