மும்பையில் 17,840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் நாட்டின் மிக நீளமான கடல்வழிப் பாலத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையையும், நவிமும்பையையும் இணைக்கும் வகையில், அரபிக்கடலில் 22 கி.மீ. தொலைவுக்கு மிக நீளமான பாலம் கட்டுவதற்கு கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதன் கட்டுமானப் பணிகள் 2018 ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி, சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வந்தது. இப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தது. இதற்கான மொத்த செலவு 17,840 கோடி ரூபாய்.
இப்பாலம், மும்பையின் சிவ்ரியில் தொடங்கி நவிமும்பையின் புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது. இப்பாலத்துக்கு ‘அடல் சேது’ என்று மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்தப் பாலம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டிருக்கிறது. நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் இப்பாலம் அமைக்கப்பட்டிருப்பதால், இது ‘மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாலம், மும்பை – நவிமும்பை இடையேயான 15 கி.மீ. பயண தூரத்தை குறைப்பதோடு, 1 முதல் ஒன்றரை மணி நேரமாக இருந்த பயண நேரத்தையும் 20 நிமிடங்களாக குறைத்திருக்கிறது. இந்தப் பாலத்தில் இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
இந்த பிரம்மாண்ட பாலத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதற்காக மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்ற பிரதமருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், ஹோட்டல் மிர்ச்சி சௌக்கில் இருந்து சுவாமி மஹாராஜ் சௌக் வரை பிரதமர் மோடி காரில் பேரணியாகச் சென்றார். அப்போது, வழிநெடுகிலும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் மலர்தூவி பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.
தொடர்ந்து, கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ராம்குந்துக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு பூஜை செய்து, ஆரத்தி காண்பித்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, பஞ்சவடி பகுதியில் உள்ள காலாராம் கோவிலிலும் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
இதன் பிறகு, நாஷிக்கில் 27-வது தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிறகு, அங்கிருந்து மும்பைக்கு வந்த பிரதமர் மோடி, அடல் சேது கடல்வழி பாலத்தைத் திறந்து வைத்து, நவிமும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் சுமார் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதில், 8,700 கோடி ரூபாய் மதிப்பிலான மும்பை எல்லோ கேட் முதல் மெரின் டிரைவ் வரை 9.2 கி.மீ. தூரம் அமைக்கப்படும் சுரங்கப் பாதையும் அடக்கம்.
இந்த சுரங்கப் பாதை கிழக்கு புறநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை மும்பை வளர்ச்சிக்கு மற்றொரு மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் மகாராஷ்டிராவில் நிறைவடைந்த மற்றும் தொடங்கி வைத்த திட்டங்களின் மொத்த மதிப்பு 30,000 கோடி ரூபாயாகும். பிரதமரின் விழாக்களில் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி ,மும்பை, நவிமும்பை மற்றும் நாசிக் நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.