தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தை மத்தியக் குழுவினர் இன்று 2-வது முறையாக நேரில் ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 -ம் தேதிகளில் அதீத கனமழை பெய்தது. இதன் காரணமாக பல பகுதிகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கார், பைக், வீடுகள் என அனைத்தும் நீரில் மூழ்கி பலத்த சேதம் ஏற்பட்டது.
இதனை மத்தியக் குழுவினர் கடந்த டிசம்பர் மாதம் 20 மற்றும் 21 -ம் தேதி நேரில் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று, அதாவது 12 -ம் தேதி இரண்டாவது முறையாக 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர், இரு பிரிவுகளாக, பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர். ஒரு பிரிவினர் புன்னைக்காயல், பழைய காயல், அகரம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கருத்தப்பாலம் ஆதிபராசக்தி நகர், ஓம் சக்தி நகர், மாப்பிள்ளையூரணி, அத்திமரப்பட்டி மற்றும் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
மற்றொரு குழுவினர், ஏரல், மறவன் மடம், முறப்பநாடு, பேரூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.