செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏமனின் ஹௌதி அமைப்பினரை குறிவைத்து அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி இருக்கின்றன.
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதற்கு, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
இப்போரில் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எனவே, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பதிலுக்கு, செங்கடலில் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை நிறுத்தும்படி ஐ.நா.வும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் எச்சரிக்கை விடுத்து வந்தன. ஆனால், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் பொருட்படுத்தவில்லை.
இதையடுத்து, அமெரிக்காவும், பிரிட்டனும், ஏமன் நாட்டில் ஹௌதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதலும், கப்பல்படை மூலம் தாக்குதலும் நடத்தி இருக்கின்றன.
ஏமன் நாட்டின் சனா, அல் ஹுதைதா, சத்தா, தாமர் ஆகிய நகரங்களின் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், “எங்களது நாட்டவரை தாக்கினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதை வெளிப்படுத்த இலக்குகளை குறிவைத்து தாக்கி வருகிறோம்” என்றார்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், “செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கப்படுகிறது. சர்வதேச அமைப்புகளின் தொடர்ச்சியான எச்சரிக்கையை மீறி ஏமன் தாக்குதல் நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தப்படுகிறது” என்றார்.
அமெரிக்காவும், பிரிட்டனும் தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேலுக்குச் செல்லும் அனைத்து கப்பல்களும் தாக்கப்படும் என்று ஹௌதி அமைப்பு அதிரடியாக அறிவித்திருக்கிறது.
இதனிடையே, ஏமன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஓமன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேலின் நட்பு நாடுகளும், இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்திருக்கிறார்.