பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், அதன்படி, கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோவை, நெல்லை செல்லும் என்றும், மாதவரத்தில் பேருந்து நிலையத்தில் இருந்து, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும் என அறிவிப்பு வெளியானது.
பூந்தமல்லியில் இருந்து, ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் என்றும், தாம்பரம் சானிடோரியத்தில் இருந்து, திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் என்றும், கே.கே.நகரில் இருந்து, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் என கூறப்பட்டது.
மேலும், திருச்சி, தஞ்சை, கரூர் மற்றும் மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கும் என்றும் திமுக அரசு அறிவித்தது.
இதை நம்பி, முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் செல்வதற்கு பதில் கோயம்பேடு வந்தனர். ஆனால், நீண்ட நேரம் பஸ்கள் வராததால், இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் புறப்படுவதாக தெரிவித்தனர். இதனால், அவசரம் அவசரமாக புறப்பட்டு சென்றபோதும், அவர்களால் பேருந்தை பிடிக்கமுடியவில்லை. அதற்குள், பஸ் புறப்பட்டுபோய்விட்டது.
இதேபோல, கிளாம்பாக்கத்தில் முன்பதிவு செய்யாத பயணிகள் காத்திருந்தனர். ஆனால், முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான பேருந்து மட்டுமே அங்கு வந்ததால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பொங்கல் பண்டிகையொட்டி, சிறப்பு பேருந்து இயக்கம் குறித்து, தமிழக அரசு மாற்றி, மாற்றி அறிவிப்பு வெளியிட்டதால், பொது மக்கள் குழப்பம் அடைந்து, பேருந்தை தவறவிட்டதுதான் மிச்சம்.
இதனால், பாதிக்கப்பட்டவர்கள், மக்களுக்கு நல்லது செய்யாட்டியும்பரவாயில்லை, இப்படி செய்யக்கூடாது என திமுக அரசையும், போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கரையும் திட்டித்தீர்த்தனர்.