இராம ரத யாத்திரை நடைபெற்றபோது, யாத்திரை முழுவதும் மோடி என்னுடன் இருந்தார். அப்போது அவர் பிரபலமாக இல்லை. ஆனால், இராமர் தனது கோவிலை மீண்டும் கட்டுவதற்காக தனது பக்தரை (மோடி) தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது இப்போது புரிகிறது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மீண்டும் இராமர் கோவில் கட்டுவதற்காக இராமஜென்ம பூமியை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தி, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, 1990-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ம் தேதி குஜராத்திலிருந்து அயோத்திக்கு “இராம ரத யாத்திரை”யை நடத்தினார்.
இதன் பிறகு, பா.ஜ.க.வின் செல்வாக்கை உயர்த்தும் வகையில், ஜனதேஷ் யாத்திரை, ஸ்வர்ண ஜெயந்தி யாத்திரை, பாரத் உதய் யாத்திரை, பாரத் சுரக்ஷா யாத்திரை ஆகிய யாத்திரைகளை அத்வானி மேற்கொண்டார்.
இந்த சூழலில், 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. மேலும், அயோத்தி இராம ஜென்மபூமி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றமும் இராமர் கோவில் கட்ட உத்தரவிட்டு பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.
இதையடுத்து, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி இராமர் கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை விழா நடந்தது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, 1,800 கோடி ரூபாயில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா, கும்பாபிஷேகம், ராம் லல்லா சிலை பிரதிஷ்டை ஆகியவை வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகள் வரும் 16-ம் தேதியில் இருந்து தொடங்குகின்றன. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.
இதனிடையே, அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பா.ஜ.க. மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
எனினும், 96 வயதான அத்வானி வயது மூப்பு காரணமாக கலந்த கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அத்வானி கலந்துகொள்வார் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், இராம ரத யாத்திரை மற்றும் இராமர் கோவில் திறப்பு விழா குறித்து எல்.கே.அத்வானி தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது குறித்து அத்வானி கூறுகையில், “இராம ரத யாத்திரை புறப்பட்டபோதே, இராமர் கோவில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்படும் என்கிற விதி இருப்பதை நான் உணர்ந்தேன்.
யாத்திரை தொடங்கிய சில தினங்களிலேயே, நான் வெறும் தேரோட்டி மட்டும்தான் என்பதை அறிந்து கொண்டேன். யாத்திரை இராமர் பிறந்த இடத்திற்கே சென்றதால் ரதம் அனைவரும் வணங்கக்கூடிய ஒன்றாக இருந்தது.
யாத்திரையின் போது பல்வேறு அனுபவங்கள் என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தின. முகம் தெரியாத நிறைய பேர் கிராமங்களில் இருந்து, என்னை சந்திக்க வந்தார்கள். அவர்களின் முகம் முழுக்க உணர்ச்சி நிரம்பி இருந்தது.
அவர்கள் எனக்கு வணக்கம் தெரிவிப்பார்கள். பின்னர், இராமர் கோஷத்தை எழுப்புவார்கள். அப்போது, மக்கள் இராமர் கோவில் வேண்டும் என்ற கனவுடன் இருந்தனர் என்கிற தகவல் தெளிவாகத் தெரிந்தது.
ரத யாத்திரை முழுவதும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி என்னுடன்தான் இருந்தார். அப்போது அவர் மிகவும் பிரபலமாக இல்லை. ஆனால், அந்த நேரத்தில் இராமர் தனது கோவிலை மீண்டும் கட்டுவதற்காக தனது பக்தரை (மோடி) தேர்ந்தெடுத்திருக்கிறார்.
அந்த நேரத்தில், அயோத்தியில் ஒரு நாள் ஸ்ரீராமரின் பிரமாண்டமான கோவில் கட்டப்படும் என்று விதி முடிவு செய்ததாக நான் உணர்ந்தேன். தற்போது பிரதமர் மோடி இராமர் சிலையை பிரதிஷ்டை செய்யவிருக்கிறார். அவர் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் சார்பில் இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.