பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியில், தொழில்முனைவோர்களில் பெண்கள், இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற ஆர்வத்தோடு நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
ஆந்திரா, கர்நாடகா என இரண்டு மாநிலங்களோடு எல்லையை பகிர்ந்துகொள்ளும் தமிழகத்தின் ஒரே தொகுதி. ஆந்திர தமிழக எல்லைப்புற மக்களின் நட்புறவைப் போற்றும் தெய்வமாக உண்டிகை நத்தம் கீரம்மா ஆலயம் அமைந்துள்ளது.
பழமைமிக்க கோதண்டராமர் கோவிலும், பச்சைமலை முருகன் கோவிலும் வேப்பனப்பள்ளிக்கு அழகு சேர்க்கின்றன. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களின் எல்லையில் உள்ள வேப்பனஹள்ளி பகுதியை கி.பி. 6-ம் நூற்றாண்டில் கன்னட அரச மரபினர்களான கங்கர்கள், நுளம்பர்கள், ஹொய்சளர்கள் ஆண்டுள்ளனர்.
பன்னப்பள்ளி கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டு, கி.பி. 910-ம் நூற்றாண்டை சேர்ந்த கன்னட மொழி நடுகல் கல்வெட்டு.
இது, நுளம்பர் மன்னன் வீரா நுளம்பன் என்ற அன்னிகன் மன்னன் காலத்து நடுகல் என்பது இந்தப் பகுதியின் தொன்மையை வெளிக்காட்டுகிறது.
வேப்பனப்பள்ளி சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகள் பேசுகிறார்கள். நமது பாரத பிரதமரின் தேசிய கல்வி கொள்கையில் முக்கிய அம்சம் தாய் மொழியை கற்க வேண்டும் என்பதுதான்.
அத்துடன், ஆங்கிலம் மற்றும் மூன்றாவதாக ஒரு விருப்ப மொழியை படிக்க, தேசிய கல்வி கொள்கை மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது. ஆனால், தமிழகத்தில் மாணவர்களுக்கு மூன்றாவது மொழியைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை மறுக்கிறார்கள்.
ஓசூர் பகுதியில் தமிழ் மக்களுடன், கன்னடம் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவர்களின் தாய் மொழியை விருப்ப மொழியாக கூட கற்கமுடியாத சூழல் இன்று தமிழகத்தில் உள்ளது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியில், தொழில்முனைவோர்களில் பெண்கள், இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் உதவி ரூ. 26,659 கோடி ரூபாய். தமிழகத்தில் பதியப்பட்ட மொத்த சிறு குறு நிறுவனங்களில், 5,84,599 நிறுவனங்கள், பெண்களின் பெயரில் உள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக பெண்கள் அதிகளவில் சிறு, குறு நிறுவனங்கள் நடத்துவது தமிழகத்தில் தான்.
பாராளுமன்றத்தில், சட்டமன்றத்தில் 33 சதவீதம் பெண்கள் இருக்கவேண்டும் என்று இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவந்தவர் நமது பிரதமர் மோடி அவர்கள்.
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் 70 சதவீத வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலவச கழிப்பறை, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, அமைச்சரவையில் 11 பெண்களுக்கு அமைச்சர் பொறுப்பு என மகளிர் முன்னேற்றத்திற்கு பிரதமர் செய்துள்ள பணிகள் ஏராளம். இந்தியாவில் இன்று 1.2 கோடி மகளிர் சுயஉதவி குழு உள்ளது. அதில் 88 சதவீத சுயஉதவி குழுக்கள் முழுவதுமாக பெண்கள் நடத்தும் சுய உதவி குழுக்கள் ஆகும்.
கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 7 கோடி பெண்கள் சுய உதவி குழுக்களில் இணைத்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளில் வழங்கப்பட்ட கடன் தொகை 7.22 லட்ச கோடி ரூபாய். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் உருவான மகளிர் தொழில் முனைவோரின் எண்ணிக்கை 10,037 ஆகும்.
வேப்பனப்பள்ளி தொகுதிக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, ராயக்கோட்டையில் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும், தென்பெண்ணை ஆற்றிலிருந்து உபரிநீர், லட்சுமி நாராயண ராயலு ஏரிக்குக் கொண்டு வரப்பட்டு நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்க ஆவன செய்யப்படும் என எந்த வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழலற்ற, நேர்மையான மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சி தொடர, தமிழகமும் இம்முறை துணை நிற்க வேண்டும். தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.