சென்னையில் வரும் 19-ம் தேதி நடக்கவிருக்கும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருகை தருகிறார்.
நாடு முழுவதும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதையொட்டி, கடந்த மாதம் சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் இலச்சினை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது, ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதையடுத்து, ‘கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023’ சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் வரும் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடக்கவிருக்கின்றன.
இப்போட்டிகளின் தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் வரும் 19-ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கவிருக்கிறது. இவ்விழாவில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
மேலும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோரும் விழாவில் பங்கேற்கிறார்கள்.
27 பிரிவுகளில் நடக்கவிருக்கும் இந்தப் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 6,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகளும், 1,600 பயிற்சியாளர்களும், 1,000 நடுவர்களும் பங்கேற்கிறார்கள்.
இப்போட்டியில், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காட்சி விளையாட்டுகளில் இடம் பெற்றிருக்கிறது. விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதால் விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.