பாஜக சமர்ப்பித்த வெள்ளை அறிக்கையை திமுக அரசு செயல்படுத்தவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
சங்ககாலத்தில் கோவூர் நாடு என்றழைக்கப்பட்ட அதியமான் மன்னர்கள் ஆண்ட பூமி ஊத்தங்கரை. காசி விஸ்வநாதர் ஆலயம், லட்சுமி நாராயண பெருமாள் கோவில், கல்லாவி வேடியப்பன் சுவாமி என மக்களின் வாழ்வியலோடு நெருக்கமான கோவில்கள் அமைந்திருக்கும் பகுதி.
மாங்கனி நகரம் என்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெயர் வருவதற்கு காரணமே ஊத்தங்கரை தொகுதியில் ஊத்தங்கரை, மத்தூர், போச்சம்பள்ளி போன்ற பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஹெக்டர் விளைநிலங்களில், மாம்பழம் சாகுபடி செய்யப்படுவதால்தான்.
சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் பல விவசாயிகள் பனை மர வளர்ப்பில் ஈடுபடுகின்றார்கள். இவர்களின் முக்கிய வாழ்வாதாரமே பனை வெல்லம் தான். வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பனை வெல்லம் கொள்முதல் என்ற கோரிக்கையை திமுக நடைமுறைப்படுத்தவில்லை.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாஜக சமர்ப்பித்த வெள்ளை அறிக்கையில், பனை மரம் ஏறுவது, கள் இறக்குவது, பனை சார்ந்த தொழில்களை அரசு ஊக்குவிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். ஆனால், அந்த வெள்ளை அறிக்கையை செயல்படுத்த திமுக அரசு முன்வரவில்லை.
கடந்த 2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி கு.ப. சிவசுப்பிரமணியம் அவர்கள் தலைமையிலான குழுவின் அறிக்கை, ‘கேடு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருள்களை மூலப்பொருள்களாக வைத்து தயாரிக்கப்படும் வெளிநாட்டு வகை மதுபானங்களை அனுமதிக்கும்போது குறைந்த பாதிப்பு கொண்ட கள்ளைத் தடை செய்வது என்பதை நியாயப்படுத்த முடியாது’ எனக் குறிப்பிட்டிருந்தது.
ஆனால் திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள் வருமானத்துக்காக, இந்த அறிக்கை திமுக அரசால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் தருமபுரி இடையே தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு 1331 கோடி ரூபாய், தமிழகத்தில் பிரதமர் மோடி வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று கிருஷ்ணகிரியில் உள்ளது.
27,213 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 2,20,188 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,45,579 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,10,425 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,08,623 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,54,588 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், 4,403 கோடி ரூபாய் முத்ரா கடனுதவி என, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
ஆனால் திமுக ஊத்தங்கரை தொகுதிக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான ஊத்தங்கரையில் அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தல், போச்சம்பள்ளி – சூர்யகாந்தி எண்ணெய் தயாரிப்புத் தொழிற்சாலை, போச்சம்பள்ளியில் கனிமப் பொருள் ஏற்றுமதி மையம், பூக்கள் ஏற்றுமதி மையம், போச்சம்பள்ளி -மருதேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்துக்காக, தமிழ் மொழிக்காக, பல்வேறு நலத்திட்டங்கள் தந்துள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகமும் இம்முறை பெரும்பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை எனத் தெரிவித்துள்ளார்.