மேற்குவங்க மாநிலம் புருலியாவில் 3 சாதுக்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, 12 பேர் கைது செய்யப்பட்டு ரகுநாத்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
நாட்டின் சில இடங்களில் சாதுக்கள், துறவிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் காரில் சென்ற 2 சாதுக்களையும், கார் டிரைவரையும் கிராம மக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்றதொரு சம்பவம் தற்போது மேற்குவங்க மாநிலத்திலும் அரங்கேறி இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 3 சாதுக்கள், மேற்குவங்க மாநிலம் கங்காசாகரில் நடைபெறும் மகர சங்கராந்தி திருவிழாவுக்கு ஒரு வாடகை காரில் சென்று கொண்டிருந்தனர். மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் கார் சென்றபோது, அவ்வழியாகச் சென்ற 3 சிறுமிகளிடம் சாதுக்கள் வழிகேட்டிருக்கிறார்கள்.
ஆனால், சாதுக்களைக் கண்டு மிரண்டுபோன சிறுமிகள், பயந்து கூச்சலிட்டபடியே ஊரை நோக்கி ஓடி இருக்கிறார்கள். இதைக் கண்ட உள்ளூர் மக்கள் சுமார் 300 பேர் திரண்டனர். சாதுக்களைப் பார்த்த கிராம மக்கள், இவர்கள் குழந்தைகளைக் கடத்துபவர்கள் என்று நினைத்து சாதுக்களைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர்.
தகவலறிந்த உள்ளூர் போலீஸார் விரைந்து சென்று, சாதுக்களை மீட்டு காசிப்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து புருலியா காவல் கண்காணிப்பாளர் அபிஜித் பானர்ஜி கூறுகையில், “சாதுக்கள் வழி தவறி வந்ததால், சிறுமிகளிடம் வழி கேட்டிருக்கிறார்கள்.
ஆனால், அச்சிறுமிகளோ தங்களைக் கடத்த முயற்சிப்பதாகக் கூறி கூச்சலிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாதுக்களை தாக்கி இருக்கிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுகிறது” என்றார்.
இந்த நிலையில், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக 12 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். எனினும், சாதுக்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசை பா.ஜ.க. கடுமையாக சாடி இருக்கிறது.
இது தொடர்பாக அம்மாநில பா.ஜ.க. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மம்தா பானர்ஜியின் காது கேளாத மவுனம் அவமானகரமானது. இந்து சாதுக்கள் உங்கள் அங்கீகாரத்துக்கு தகுதியற்றவர்களா? இந்த அட்டூழியத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனிடையே, புருலியாவில் கும்பலால் தாக்கப்பட்ட சாதுக்களை சந்தித்த பா.ஜ.க. எம்.பி. ஜோதிர்மய் சிங் மஹதோ, இச்சம்பவத்தின் பின்னணியில் ஷேக் அன்வர் என்பவர் இருப்பதாகவும், அவர்தான் சாதுக்களின் காவி உடையைப் பார்த்துவிட்டு, அவர்களை தாக்குவதற்காக கிராம மக்களைக் கூட்டிச் சென்றதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும், இச்சம்பவம் மகாராஷ்டிராவின் பால்கரில் நடந்ததைப் போலவே இருக்கிறது. இதுகுறித்து தீர விசாரித்தால் சிலரது பெயர்கள் வெளியே வரக்கூடும். இச்சம்பவம் வேறுவிதமான பிரச்சனைகளை உருவாக்கலாம் என்பதால் முதலில் போலீஸார் மறைத்து விட்டனர் என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
A group of #sadhus were #stripped and #assaulted by a mob in West Bengal's #Purulia district on Friday, January 12. A video of the incident is going viral in which the sadhus were seen being thrashed by the mob. #TMC #moblynching #WestBengal #bjp4bengal @WBPolice pic.twitter.com/SpEoD03GVW
— Ravi Pandey🇮🇳 (@ravipandey2643) January 13, 2024