பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக விமானக் கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை மற்றும் சனி, ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் பணியாற்றி வரும் ஐடி ஊழியர்கள், தொழில் அதிபர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், ஆம்னி பஸ், வந்த பாரத் இரயில், கார், வேன் மற்றும் விமானம் ஆகியவற்றில் பயணம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், சென்னையிலிருந்து கோவை, திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல, வழக்கமாக 3 ஆயிரத்து 367 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. தற்போது, 17 ஆயிரத்து 262 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வழக்கமாக 3 ஆயிரத்து 315 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 14 ஆயிரத்து 689 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சென்னையிலிருந்து சேலம் செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 290 ரூபாயாக வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது, 11 ஆயிரத்து 329 ரூபாய்-ம், சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல வழக்கமாக 2 ஆயிரத்து 264 ரூபாய் வசூல் செய்யப்ப்டு வந்த நிலையில், தற்போது 11 ஆயிரத்து 369 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இதனால், விமானப் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.