ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 30 கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்திருப்பதாகவும், இதன் மூலம் இத்திட்டம் புதிய மைல்கல்லை எட்டி இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின்படி, ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை அறிவித்தார். அதன்படி, பொதுமக்களின் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களும் ஒரே டிஜிட்டல் அட்டையில் சேமித்து வைக்கப்படும்.
மருத்துவரை சந்தித்து ஆலோசனை கேட்கும் நோயாளி, இனி காகித ஆவணங்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டிஜிட்டல் அட்டை மூலம் நோயாளியின் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களையும் மருத்துவர் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
இந்த அறிவிப்பின்படி, முதல்கட்டமாக 6 யூனியன் பிரதேசங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்னர், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தேசிய அளவில் டிஜிட்டல் சுகாதாரத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், இத்திட்டத்தின் மூலம் 30 கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அப்பதிவில், “நாடு ஆயுஷ்மானாக மாறுகிறது! 30 கோடிக்கும் அதிகமான மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் இலவச சிகிச்சைக்கான உத்தரவாதத்தைப் பெற்றிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “டிசம்பர் 22-ம் தேதி வரை, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷனின் கீழ், 50 கோடி தனிநபர்கள் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்டை வைத்திருக்கிறார்கள்.
நோயாளிகளின் பதிவுகளுக்கான பாரத் ஹெல்த் அக்கவுண்ட்டை மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆய்வகங்கள் போன்ற சுகாதார நிறுவனங்களும், காப்பீட்டு நிறுவனங்களும், பிற சுகாதார சேவை வழங்குநர்கள் பயன்படுத்துகின்றனர்.
இன்றுவரை, 33 கோடிக்கும் அதிகமான சுகாதார பதிவுகள், நோயாளிகளின் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்திருக்கிறது.