இங்கிலாந்து லயன்ஸ் அணி 9 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் இந்திய ஏ அணியின் அதிரடியை நிறுத்த முடியவில்லை.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.
வரும் ஜனவரி 25ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 2ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 15ஆம் தேதி 3வது டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 23ஆம் தேதி 4வது டெஸ்ட் போட்டியும், மார்ச் 7ஆம் தேதி 5வது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்பாக இந்தியாவுக்கு வரும் இங்கிலாந்து இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியும், பின்னர் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியிலும் இந்திய ஏ அணி பங்கேற்றுள்ளது.
இதில் முதல் பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் அணி 51.1 ஓவரில் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்த அணியில் அதிகபட்சமாக டான் மௌஸ்லி 60 ரன்களை எடுத்தார். இந்திய ஏ அணியில் அதிகபட்சமாக மானவ் சுதர் 3 விக்கெட்களையும் ஆகாஷ் தீப் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய ஏ அணி கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 32 ரன்கள் எடுக்க ரஜத் பட்டிதார் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். தமிழக அணிக்காக விளையாடி வரும் பிரதோஸ் பால் 21 ரன்கள் எடுக்க சர்ப்ராஸ்கான் அபாரமாக விளையாடி 96 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.
இதேபோன்று கே எஸ் பரத் தன் பங்கிற்கு 64 ரன்களும், துருவ் ஜூரல் 50 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 91 ஓவர் முடிவில் இந்திய ஏ அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 462 ரன்கள் எடுத்தது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணி வீரர்கள் 9 பந்துவீச்சாளர்களைத் பயன்படுத்தி இந்திய ஏ அணி விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்தனர். இது இரண்டே இரண்டு நாட்கள் நடைபெறக்கூடிய ஆட்டம் என்பதால் போட்டி சமனில் முடிந்தது.