எதிர்கட்சிகளின் “இண்டி” கூட்டணி ஆணவத்தால் இயங்கி வருகிறது. இந்த ஆணவம் கொண்ட கூட்டணி எதையும் சாதிக்காது. மேலும், அக்கூட்டணிக்கு என்ன கொள்கை இருக்கிறது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
2024 நாடாளுமன்றத் தோ்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் 26 கட்சிகள் ஒன்றிணைந்து “இண்டி” என்ற பெயரில் கூட்டணி அமைத்திருக்கின்றன. இக்கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் இதுவரை 4 முறை நேரில் சந்தித்து ஆலோசித்திருக்கிறார்கள்.
ஆனாலும், அக்கூட்டணிக்குள் குழப்பம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. 4 கூட்டங்களிலும் கூட்டணிக்குத் தலைவர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. மேலும், கூட்டணிக் கட்சிகளை காங்கிரஸ் மதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “இண்டி” கூட்டணிக்கு கொள்கையும் இல்லை, தலைவரும் இல்லை. பல்வேறு எதிர்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்திருக்கின்றன.
“இண்டி” கூட்டணியின் கொள்கைதான் என்ன? அவர்களுக்குள் எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லை. எந்தவொரு விவகாரத்திலும் கூட்டணித் தலைவர்கள் உடன்பட மாட்டார்கள். என்ன வகையான கூட்டணி இது?
ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதற்குக் கூட தயாராக இல்லாத தலைவர்களின் தன்முனைப்பு மற்றும் ஆணவத்தால் இந்த கூட்டணி இயங்கி வருகிறது. இந்த ஆணவம் கொண்ட கூட்டணி எதையும் சாதிக்காது.
இந்தியா கூட்டணிக்கென்று தலைவரும் இல்லை, கொள்கையும் இல்லை. அவர்கள் கூடிய முதல் நாளில் இருந்து அவர்களின் முரண்கள் அப்பட்டமாக தெரிகின்றன. காங்கிரஸ் கட்சிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது” என்று தெரிவித்தார்.