ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு வாகனங்களின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்களைத் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக இராணுவத்தினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேடுதல் வேட்டைக்காக இராணுவத்தினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர். உடனே சுதாரித்துக் கொண்ட இராணுவத்தினர் தீவிரவாதிகள் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை.
எனினும், இராணுவத்தினர் விடா முயற்சியுடன் எதிர் தாக்குதல் நடத்தி, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி வருவதால், அங்கு பல மணி நேரமாக துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மோப்ப நாய்களைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்புப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பூஞ்ச் பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக சோதனையிடப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து இந்திய இராணுவப் பிரிவு தங்களது அதிகாரப்பூர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நேற்று மாலை 6 மணியளவில் கிருஷ்ண காடி பூஞ்ச் பிரிவுக்கு அருகில் பாதுகாப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, அருகில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. எனினும், தீவிரவாதிகளை பிடிப்பதற்காக இந்திய இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.