இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்மா நாளை நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம் புதிய உலக சாதனையைப் படைக்கவுள்ளார்.
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த தொடரின் இரண்டாவது போட்டி நாளை இந்தூரில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பங்குபெற இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அணிக்குத் திரும்பியுள்ளார்.
நாளை நடைபெற உள்ள போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் ரோகித் சர்மா களம் இறங்கும் பட்சத்தில் புதிய உலக சாதனை ஒன்றைப் படைக்க உள்ளார்.
அதாவது, ரோகித் சர்மா இதுவரை 149 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது போட்டியில் ரோகித் களமிறங்கும்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலகிலேயே 150 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார்.
அவருக்கு அடுத்த இடத்தில் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் 134 போட்டிகளும், அயர்லாந்தின் டாக்ரெல் 128 போட்டிகளும், பாகிஸ்தானின் சோயப் மாலிக் 124 போட்டிகளும், நியூசிலாந்தின் மார்டின் கப்தில் 122 போட்டிகளும் விளையாடியுள்ளார்.
இந்திய வீரர்களில் ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக விராட் கோலி 115 போட்டிகளும் , தோனி 98 போட்டிகளும், ஹர்திக் பாண்டியா 92 போட்டிகளும், புவனேஷ்வர் குமார் 87 போட்டிகளும் விளையாடியுள்ளனர்.