ஜம்மு காஷ்மீர் சட்டசபை வளாகத்தில், 1990-களில் பீகாரில் நடந்த அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக, மகாராணி தொலைக்காட்சி தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370- ஐ பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.
இதன் பிறகு, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் ஒடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதற்காக, இராணுவம், துணை இராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில காவல்துறை அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்தது. இக்குழுவினர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடி தீவிரவாதிகளை கைது செய்தனர். அவ்வப்போது நடக்கும் துப்பாக்கி சண்டையில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
தீவிரவாதம் ஆணி வேரோடு பிடுங்கப்பட்டு வருவதால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம் குறைந்துள்ளது. இதனால், மக்கள் பாதுகாப்பான சூழ்நிலையில், ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழ்கின்றனர்.
மேலும், இரு யூனியன் பிரதேசங்களுக்கும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது. தற்போது, இரு மாநிலங்களும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதற்கிடையே, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவையைக் கலைத்து, அம்மாநிலத்தின் அப்போதைய ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டார். சட்டசபை கலைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. ஹூமா குரேஷி நடித்து வரும் இந்தி மொழி தொலைக்காட்சித் தொடரான மகாராணி தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு சட்டமன்றத்தில் வளாகத்தில் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 1990-களில் பீகாரில் தீவன ஊழல் தொடர்பாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த லாலு பிரசாத் தொடர்பாகவும், அப்போது நடந்த அரசியல் நிகழ்வுகள் தொடர்பாகவும் அடிப்படையாக வைத்து இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் மகாராணி குழுவினர், மூன்றாவது சீசனுக்கான படப்பிடிப்பு சட்டசபை வளாகத்தில் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் இரண்டு சீசன்களும் சட்டசபை வளாகத்தில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.