சென்னையில் இருந்து அயோத்திக்கு அடுத்த வாரம் முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இராமரின் குழந்தை சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக பெரியவர்கள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
அயோத்தியில் இராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, கோவிலுக்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அயோத்தியில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. அந்த வகையில், சர்வதேச தரத்துடன் விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில், சென்னையில் இருந்து அயோத்திக்கு அடுத்த வாரம் முதல் விமான சேவை தொடங்கப்படும் என்று சென்னை விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதேபோல், லட்சத்தீவின் அகாட்டி தீவுக்கும் அடுத்த வாரம் முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. மேலும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் லட்சத்தீவுகளுக்கும் சென்னையில் இருந்து விமான சேவை தொடங்கப்பட உள்ளது.