மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் மிலிந்த் தியோரா அக்கட்சியிலிருநது திடீரென விலகி இருக்கிறார். இது அக்கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் மறைந்த முரளி தியோரா. காங்கிரஸ் ஆட்சியில் 2006 முதல் 2011 வரை பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தவர். இவரது மகன் மிலிந்த் தியோரா.
தந்தை வழியிலேயே மிலிந்த் தியோராவும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மும்பை காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார். இவரும் 2011 முதல் 2014 வரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.
எனினும், மிலிந்த் தியோரா சமீப லமாக கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்த சூழலில், மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்திருக்கிறார். இவர், ராகுல் காந்தியுடன் மிக நெருக்கமான நட்புறவை பேணி வந்தார்.
தனது விலகல் குறித்து மிலிந்த் தியோரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியுடனான 55 ஆண்டுகால உறவு முடிவுக்கு வருகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் 2-வது கட்டத்தை இன்று தொடங்கவிருக்கும் நிலையில், மிலிந்த் தியோரா விலகல் அக்கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.