காஸாவுக்கு முக்கிய விநியோகப் பாதையாக இருந்து வரும், எகிப்து – காஸா எல்லையில் அமைந்திருக்கும் சுரங்கப்பாதையை மூடும் வரை நாங்கள் போரை நிறுத்த மாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் நாட்டின் மீது திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலால் இஸ்ரேல் நிலைகுலைந்து போனது.
இத்தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல் பதிலடித் தாக்குதலை தொடங்கியது. இத்தாக்குதல் 3 மாதங்களுக்கும் மேலாக இன்றுவரை நடந்து வருகிறது.
இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் ஆயிரக்கணக்கான நிலைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், காஸா நகரமும் உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 25,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஆகவே, போரை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து ஐ.நா.விலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், ஐ.நா. உட்பட அனைத்து நாடுகளின் கோரிக்கையையும் இஸ்ரேல் நிராகரித்து விட்டது.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது, “எங்களை யாரும் தடுக்க மாட்டார்கள். வெற்றி பெறும் வரை போர் தொடரும்.
காஸாவில் நடத்திய இராணுவத் தாக்குதலில், பெரும்பான்மையான ஹமாஸ் படையினரை அழித்து விட்டோம். வடக்கு காஸாவில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் எந்த நேரத்திலும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாது.
எகிப்து – காஸா எல்லையில் சுரங்கப்பாதை ஒன்று இருக்கிறது. இதுதான் காஸாவுக்கு ஒரு முக்கிய விநியோகப் பாதையாக இருக்கிறது. இந்தப் பாதையை மூடும் வரை நாங்கள் போரை நிறுத்த மாட்டோம்” என்று கூறியிருக்கிறார்.