போகிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் காலையில் புகை மூட்டம் அதிகமாக காணப்பட்டதால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் போகி பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் நேற்று இரவு முதல் போகி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பழையன கழிதலும் புதியன புகுதலும் போகி என்ற பழமொழிக்கு ஏற்ப, சென்னை மக்கள் தங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். சிறுவர்கள் மேளம் அடித்து போகி பண்டிகையை வரவேற்றனர்.
சென்னையில் பொருட்களை தீயிட்டு கொளுத்தியதால், புகைமூட்டம் அதிகரித்துள்ளது. அதிகாலையில் புகைமூட்டம் அதிகமாக இருந்ததால், வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர்.
சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்து காணப்படுகிறது. மணலி, எண்ணூர், ராயபுரம், அரும்பாக்கம், கொடுங்கையூர் உட்பட பல பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பனி மற்றும் புகைமூட்டம் காரணமாக, சென்னையில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பெரும்பாலான இடங்களை புகை சூழ்ந்துள்ளதால், விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறக்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
காலையில், சென்னை விமான நிலையத்தில் 16 உள்நாட்டு விமான சேவைகள் மற்றும் 8 வெளிநாட்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.