கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலுக்குப் பாரத பிரதமர் நரேந்திர மோடி சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 11 நாள் விரதம் இருப்பதாகக் கடந்த 12ம் தேதி பாரத பிரதமர் மோடி அறிவித்தார்.
அன்றைய தினம் மஹாராஷ்டிராவில் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். பிறகு பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோயிலுக்குச் சென்ற மோடி பிரார்த்தனை செய்தார்.
அதற்கு முன்னர் கோயில் வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணியிலும் மோடி ஈடுபட்டார். நேற்று, ஆந்திர மாநிலம், லேபக்ஷி பகுதியில் உள்ள வீரபத்ரர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
இன்று கேரள மாநிலம் சென்ற பிரதமர் மோடி, குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடி பாரம்பரிய உடை அணிந்து கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார்.
அவர் கோவிலின் அனைத்து பகுதிகளுக்கும் நடந்து சென்று வழிபட்டார். சுமார் 1 மணி நேரம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார்.
அதன் பிறகு காலை 8.45 மணியளவில் குருவாயூர் கோவிலில் நடந்த முன்னாள் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யான நடிகர் சுரேஷ்கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பிரதமர் மோடிக்கு நடிகர் சுரேஷ்கோபி தங்க தகடு ஒன்றைப் பரிசாக வழங்கினார்.
திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு குருவாயூர் கோவிலில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, திருப்பாறையாறு ஸ்ரீராம சுவாமி கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.
பாரத பிரதமரின் வருகையை முன்னிட்டு குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மற்றும் திருப்பாறையாறு ஸ்ரீராமசுவாமி கோவிலில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.