நீலகிரியில் இன்றும், நாளையும் உறை பனிக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக, இன்று, ஜனவரி 17-ம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், ஜனவரி 17 மற்றும் 18 -ம் தேதி ஆகிய 2 நாட்கள், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு நேரத்தில் மட்டும் உறைபனிக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொருத்தவரை, அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகும். குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.