ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 2வது சூப்பர் ஓவர் மூலமாக இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
இதன் கடைசி போட்டி நேற்று பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடித்து களமிறங்கிய விராட் டக் அவுட் ஆனார்.
இவரைத் தொடர்ந்து களமிறக்கிய சிவம் துபே 1 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 22 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
அப்போது இந்திய அணியின் ரிங்கு சிங் களமிறங்கினார். ரோகித் – ரிங்கு அதிரடியாக விளையாடினர். இருவரும் கடைசி கடைசி ஐந்து ஓவரில் மட்டும் 103 ரன்கள் எடுத்து அசத்தினர்.
இதில் ரோகித் சர்மா 11 பௌண்டரீஸ் 8 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 121 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதேபோல் ரிங்கு சிங் 6 சிக்சர்கள் 2 பௌண்ட்ரீஸ் என 69 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்தியா அணி 212 ரன்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் தலா 50 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய குல்பாடின் நைப்- முகமது நபி இணை ரன்களை சேர்ந்தனர். இதில் முகமது நபி 34 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து விளையாடி வந்த குல்பாடின் நைப் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார்.
கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என ஆப்கானிஸ்தான் அணி கடைசி பந்தை சந்தித்தது. ஆனால் அந்த பந்தில் 2 ரன்களே கிடைத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 212 ரன்களை எடுத்தது.
இதனால் ஆட்டம் டிரா ஆனது. இந்தியா அணியில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். குலதீப் யாதவ் மாறும் ஆவேஷ் கான் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஒவரில் இந்திய அணி தரப்பில் சூப்பர் ஓவரை வீச முகேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் குல்புதீன் – குர்பாஸ் இருவரும் களமிறங்கினர்.
அதில் முதல் பந்திலேயே விராட் கோலியின் சிறந்த பீல்டிங்கால் குல்புதீன் ரன் அவுட்டாகி வெளியேற, பின்னர் குர்பாஸ் – நபி இணைந்தனர். அதன்பின் 1, 4, 1, 6 ஆகிய ரன்கள் அடிக்கப்பட, கடைசி பந்தில் சஞ்சு சாம்சன் வீசிய த்ரோ, நபி கால்களில் பட்டு வேறு திசைக்கு சென்றது. இதனால் 3 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணி 16 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா – யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி களமிறங்கியது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஒமர்சாய் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார்.
முதல் 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்த நிலையில், 3 மற்றும் 4 ஆகிய பந்துகளில் ரோகித் சர்மா அபார சிக்சர்களை விளாசினார்.
பின்னர் 5வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட, கடைசி பந்தில் இந்திய வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ரோகித் சர்மாவால் 2 ரன்கள் ஓட முடியாது என்பதை அறிந்து, ரிட்டையர்ட் அவுட்டாகி வெளியேறினார்.
அப்போது ரிங்கு சிங் களமிறங்க, கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதனால் ஆட்டம் மீண்டும் டை-ஆனது. இதனால் மீண்டும் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
இம்முறை இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் இணை களமிறங்கியது. முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த ரோகித் சர்மா, 2வது பந்தில் பவுண்டரி விளாசினார்.
3வது பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில், 4வது பந்தில் ரிங்கு சிங் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்த பந்திலேயே ரோகித் சர்மா ரன் அவுட்டானார்.
இதனால் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 12 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முகமது நபி – குர்பாஸ் கூட்டணி களமிறங்கியது.
இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னாய் பவுலிங் செய்ய கடைசி நிமிடத்தில் அழைக்கப்பட்டார். அவர் வீசிய முதல் பந்திலேயே நபி ஆட்டமிழக்க, தொடர்ந்து 2வது பந்தில் ஒரு ரன்னும், 3வது பந்தில் சிக்சர் அடிக்க முயன்று குர்பாஸ் டக் அவுட்டாகினர். இதன் மூலம் இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருதும், சிவம் துபேவுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.