சமீபத்தில் வெளியான ஹனுமான் திரைப்படத்தின் கதாநாயகனான தேஜா சஜ்ஜாவை நேரில் சந்தித்துப் பாராட்டினார் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி.
இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்துள்ள திரைப்படம் தான் ஹனுமான். ஆந்திராவில் சங்கராந்தி முன்னிட்டு இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும் இப்படம் வெளியானது.
இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயரும், வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
பல மொழிகளில் திரையரங்கத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில் 4 நாட்களில் 50 கோடிகளைத் தாண்டி வசூலித்துள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜி கிஷன் ரெட்டி, ‘ஹனுமான்’ படத்தின் கதாநாயகன் தேஜா சஜ்ஜாவை டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று பாராட்டினார்.
பின்பு அவருடன் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்ட அமைச்சர் அந்த படங்களைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், ” ஹனுமான் திரைப்படத்தின் திறமையான இளம் நடிகரான தேஜா சஜ்ஜாவை டெல்லியில் சந்தித்தது மகிழ்ச்சி ” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், ” ஹனுமான் திரைப்படத்திற்கு விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ரூ.5 அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது. அதேபோல் கும்பாபிஷேக கொண்டாட்டத்துடன் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது ” என்று தெரிவித்திருந்தார்.