உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில் திறக்கப்படவிருக்கும் இராமர் கோவிலைக் குறிப்பிடும் வகையிலான 6 நினைவு தபால் தலைகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா, கும்பாபிஷேக விழா மற்றும் இராம் லல்லா சிலை பிராண பிரதிஷ்டை விழா ஆகியவை வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கின்றன.
இக்கோவிலை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இவ்விழாவில் கலந்துகொள்ளும்படி நாடு முழுவதும் உள்ள முக்கியத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. மேலும், விழாவை முன்னிட்டு, கடந்த 16-ம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இராமர் கோவில் நினைவு தபால் தலைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த தபால் தலையில் இராமர் கோவில், சூரியன், சராயு நதி மற்றும் கோவில் சிற்பங்கள் போன்ற படங்கள் அடங்கி இருக்கின்றன.
மேலும், உலகம் முழுவதும் இருக்கும் இராமர் பற்றிய தபால் தலைகளின் ஆல்பத்தையும் வெளியிட்ட பிரதமர் மோடி, “இராமர் கோவில் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வுக்கான ஏற்பாடு நடக்கும்போது, மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்திருக்கிறது.
இராமர் கோவிலை குறிப்பிடும் வகையிலான 6 நினைவு தபால் தலைகள் மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் இராமர் பற்றிய தபால் தலைகளின் ஆல்பம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதையொட்டி, நாட்டு மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து இராம பக்தர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.