அசாம் மாநிலம் கோல்பாரா அருகே வாகனத்தில் கடத்தி செல்ல முயன்ற, 1,800 டெட்டோனேட்டர்கள், 2,356 ஜெலட்டின் குச்சிகள், பேட்டரிகள், வயர்கள் உள்ளிட்ட வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டம் துப்தாரா பகுதி வழியாக, வெடிபொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், துப்தாரா பகுதியில் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரில் வந்தவர்கள் போலீசாரை பார்த்தவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினர். உடனடியாக, அந்த காரை சோதனை செய்த போலீசார் வெடிபொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதை அடுத்து போலீசார் காரை பறிமுதல் செய்தனர். மேலும், காரில் இருந்த ஆயிரத்து 800 டெட்டோனேட்டர்கள், 2 ஆயிரத்து 356 ஜெலட்டின் குச்சிகள், பேட்டரிகள், வயர்கள் உள்ளிட்ட வெடிகுண்டுகள் தயாரிக்கும் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.