ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களை சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்க அறிவித்திருக்கிறது. எனினும், இதனால் எங்கள் நிலைப்பாடு மாறாது. எங்களது தாக்குதல் தொடரும் என்று ஹௌதி தீவிரவாதிகள் அறிவித்திருக்கிறார்கள்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.
இத்தாக்குதலில், இஸ்ரேல் நாட்டில் 1,200 பேர் கொல்லப்பட்ட நிலையில், அந்நாடு பதிலடித் தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேல் நடத்தி வரும் முப்படைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திணறி வருகிறார்கள். இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 25,000 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வரும் இப்போரில் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு இஸ்ரேலும் பதிலடித் தாக்குதல் கொடுத்து வருகிறது. அதேசமயம்,, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்கள், சரக்குக் கப்பல்கள் உள்ளிட்ட கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
எனவே, அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை செங்கடல் பகுதியில் நிலைநிறுத்தி வைத்து, ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை இடைமறித்து தாக்கி அழித்து வருகிறது. எனினும், ஹௌதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு பயந்து செங்கடல் வழியாகச் செல்லாமல் கப்பல்கள் சுற்றிச் சென்று வருகின்றன.
இதனால், எரிபொருட்களின் செலவு அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. இது பல்வேறு நாடுகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.
எனினும், எச்சரிக்கையையும் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்காவும், பிரிட்டனும் ஏமன் நாட்டில் ஹௌதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டன.
ஆனாலும், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை. இதையடுத்து, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பை சர்வதேச தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்திருக்கிறது. எனினும், இந்த அறிவிப்பு தங்களின் நிலைப்பாட்டை மாற்றாது எனவும், செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல் தொடரும் என்றும் ஹௌதி தீவிரவாதிகள் அறிவித்திருக்கிறார்கள்.