என்பிடெல்- சென்னை ஐஐடி ஜனவரி-ஏப்ரல் 2024 செமஸ்டரில் 720 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியான என்பிடெல் (தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம்) – சென்னை ஐஐடி, ஜனவரி-ஏப்ரல் 2024 செமஸ்டருக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது.
கற்க விரும்புவோர் ஸ்வயம், என்பிடெல் ஆகிய இணைய முகப்புகள் வாயிலாக பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். சான்றிதழ் தேர்வெழுத விரும்புவோருக்கு கட்டணம் ரூ.1,000. என்பிடெல் படிப்புகளுக்காக இதுவரை 2.5 கோடிக்கும் அதிகமானோர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
பொறியியல், அறிவியல், மானுடவியல், மேலாண்மைத் துறைகளில் 720-க்கும் மேற்பட்ட படிப்புகளுடன், இந்தச் செமஸ்டரில் 30 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு மேம்பட்ட கற்றல் வாய்ப்பை வழங்க என்பிடெல் திட்டமிட்டுள்ளது.
இந்தச் சான்றிதழ் படிப்புகளில் சேர கடைசிநாள் – 19 பிப்ரவரி 2024. ஆர்வமுடையவர்கள் ஜனவரி 2024 செமஸ்டருக்கான பின்வரும் இணைப்பு வாயிலாக தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்- NPTEL- http://nptel.ac.in/ அல்லது SWAYAM- http://swayam.gov.in/
கற்க விரும்புவோர் ஸ்வயம், என்பிடெல் ஆகிய இணைய முகப்புகளில் கட்டணம் ஏதுமின்றி பெயர்களைப் பதிவுசெய்யலாம். விருப்பச் சான்றிதழ் தேர்வு எழுத விரும்புவோருக்கு கட்டணம் ரூ. 1000. தற்போது வரை 2.5 கோடிக்கும் அதிகமானோர் என்பிடெல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
இந்தப் படிப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் என்பிடெல் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ், “என்பிடெல் குறைந்த கட்டணத்தில், சான்றிதழ் அளிக்கக்கூடிய ஆன்லைன் படிப்பை மிகப்பெரிய அளவில் செயல்படுத்தி, கல்வி அமைச்சகத்தின் முன்னோடி முன்முயற்சியைத் தொடர்ந்து வருகிறது.
இங்கு கற்கும் மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், அவர்களின் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கவும் எங்களது விரிவுபடுத்தப்பட்ட பாடப்பிரிவுகள் உதவும் என நம்புகிறோம்.” என்றார்.