கொரேனா பாதிப்பில் இருந்து உலகம் மீண்டு வரும் நிலையில், 100 சதவீதம் மனிதர்களைக் கொல்லக்கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரசை சீனா பரிசோதித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, பின் உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கியது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அது உருமாறி கொண்டே இருப்பது, உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.
கொரோனாவில் இருந்து டெல்டா, பின்னர், ஒமிக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது, ஒமிக்ரான் பிஏ.2.86 வைரஸிலிருந்து திரிபு ஏற்பட்டு, ஜே.என்.1 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் கொரோனாவால் உலகில் பெரும்பாலான நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது, கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. எனினும், சில நாடுகளில் இயல்பு நிலை முழுமையாக திரும்பவில்லை.
இந்நிலையில், 100 சதவீதம் மனிதர்களைக் கொல்லக்கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரசை வைத்து சீனா ஆய்வு செய்து வருவது தெரிய வந்துள்ளது.
சீன இராணுவத்திடம் பயிற்சி பெற்ற மருத்துவர்கள், பாங்கோலின் கொரோனா வைரஸ் (Pangolin Corona Virus) என்று அழைக்கப்படும் புதிய வகை வைரஸை உருவாக்கி உள்ளது.
இந்த புதிய வைரசை எலிகள் சிலவற்றுக்கு கொடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர். இதில், எலிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை அறிவதற்காக ஆய்வு செய்யப்பட்டது.
பாங்கோலின் கொரோனா வைரஸ் எலிகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிவதற்காக ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவர்கள் நான்கு எலிகளுக்கு ஒரு டோஸ் ஆக்டிவேட்டட் வைரஸைக் செலுத்தினர். வைரஸ் செலுத்தப்பட்ட எலிகளுடன் 4 ஆரோக்கியமான எலிகளையும் வைத்தனர்.
7-8 நாட்களுக்குள், ஆரோக்கியமான எலிகளும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தன. பாதிக்கப்பட்ட அனைத்து எலிகளும் ஐந்து நாட்களுக்குள் எடை குறைந்ததையும், கண்கள் வெண்மையானதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இந்த வைரஸானது, மனிதர்களிலும் 100 சதவீதம் தீவிர தொற்றும், பாதிப்பும் ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடிய திறன் படைத்தது என்று கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் தற்போதுதான் மீண்டு வந்த நிலையில், அதைவிட கொடிய வைரஸை சீனா பரிசோதித்து வருவது உலக நாடுகளை கவலை அடைய செய்துள்ளது.