திருச்சி ஸ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, வரும் 20-ஆம் தேதி வரை, திருச்சியில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளை மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளார்.
மகாராஷ்டிராவில் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான எட்டு அடல் மிஷன், அம்ருத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மகாராஷ்டிராவில் PMAY-Urban திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பின்னர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போயிங் இந்தியா இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி மையத்தைத் திறந்து வைக்கும் பிரதமர் மோடி, போயிங் சுகன்யா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
இதனை அடுத்து தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக வரும் பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம், தனுஷ்கோடி சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், திருச்சி மாநகரில் வரும் 20-ஆம் தேதி வரை, டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது, டிரோன்கள் பறக்கவிடப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல், சென்னை, இராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களிலும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி வரும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, காவல்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.