தமிழகத்துக்கான மத்திய அரசு நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டிருக்கிறது? என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டிருப்பதாகவும், இதற்கு தகவல்களை திரட்டி அனுப்பும்படி துறைச் செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான திட்டங்கள் மத்திய அரசு நிதியை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களில் குறிப்பிட்ட தொகையை தமிழக அரசும் செலவிட வேண்டும் என்பது நடைமுறை.
அதேசமயம், தமிழகத்தில் தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்தே, மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லை. இதனால், தமிழகத்துக்கு உரிய நிதியை தராமல் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக தி.மு.க.வின் மேல்மட்டத் தலைவர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரும் புள்ளி விவரங்களுடன் பதிலளித்து வருகிறார்கள். எனினும், தமிழக மக்கள் மத்தியில் மத்திய அரசுக்கு கெட்ட பெயரை உண்டாக்க வேண்டும் என்று தி.மு.க. திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக பா.ஜ.க. மேலிடம் கருதுகிறது.
அந்த வகையில், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று மீண்டும் தி.மு.க. அரசு குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. இதற்கு மத்திய அரசுத் தரப்பில் அமைச்சர்கள் பலரும் பதில் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், தமிழகத்தில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களில் மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பங்களிப்பு என்ன என்பது குறித்தும், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு மத்திய அரசின் தொகை எவ்வளவு செலவழிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் பட்டியல் தயார் செய்து அனுப்புமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பி இருக்கிறார்.
இக்கடிதம் ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ் குமார் மூலம் தமிழக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் குமார் மீனாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஆளுநர் கேட்டிருக்கும் தகவல்களை திரட்டி அனுப்புமாறு துறைச் செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, தகவல்களை திரட்டும் பணியில் துறைச் செயலாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதுகுறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கும்போது மத்திய அரசு நிதி தமிழகத்தில் முழுமையாக செலவழிக்கப்பட்டு இருக்கிறதா? அல்லது திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறதா? என்கிற விவரம் தெரியவரும்.
மேலும், மத்திய அரசு மீது தமிழக அரசு கூறும் புகார் குறித்த உண்மைத்தன்மையும் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, ஏற்கெனவே பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்தபோது கொரோனா காலத்தில் செலவழிக்கப்பட்ட தொகை பற்றி கணக்குக் கேட்டதாகவும், எனவே இந்த விவரங்களை தெரிந்துகொள்ள கவர்னருக்கு அதிகாரம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.