மகாராஷ்டிராவிலிருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு சுனில் என்ற ஒரு பக்தர் 25 நகரங்களைச் சுற்றி அனைத்து நகரங்களிலும் ரங்கோலி கோலம் வரைந்துகொண்டே செல்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் இன்னும் மூன்று நாட்களில் நடைபெறவுள்ளது.
இந்த வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கொண்டாடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது ரங்கோலி கலைஞர் ஒருவர் மகாராஷ்டிராவிலிருந்து அயோத்திக்கு ரங்கோலி போட்டுக்கொண்டு செல்கிறார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுனில் குமார் கும்பார் மகாராஷ்டிராவிலிருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு 25 நகரங்களைச் சுற்றி அனைத்து நகரங்களிலும் ரங்கோலி கோலம் வரைந்துகொண்டே செல்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், ” நான் 30 வருடங்களாக ரங்கோலி கோலம் போட்டுக்கொண்டு வருகிறேன். எனது கலையை ஸ்ரீ ராமரின் பாதங்களில் சமர்ப்பிக்கும் பொருட்டு இவ்வாறு ரங்கோலி போட்டுக்கொண்டே செல்கிறேன்.
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தை உள்ளடக்கிய 25 நகரங்களில் ரங்கோலி கோலத்தைப் போட்டுக்கொண்டே அயோத்தியை அடைவேன். இதற்காக நான் 2000 கிலோ கோலப் பொடியைப் பயன்படுத்துகிறேன்.
இப்போது என்னிடம் 1,000 கிலோ கோலப் பொடி உள்ளது. நான் ஜனவரி 17 அன்று குறைந்தபட்சம் 500 கிலோவைப் பயன்படுத்துவேன், மீதியை அடுத்த நாள் பயன்படுத்துவேன் ” என்று ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்துடன் கூறினார்.
இந்த ரங்கோலி கோலத்தைப் போடுவதற்காகக் கைப்பிடியுடன் கூடிய ஸ்டீல் பாத்திரத்தில் கீழே துளையிட்டு ரங்கோலி கோலத்தை போட்டுக்கொண்டு வந்தார்.