உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி வளாகத்தின் அடித்தளப் பகுதியின் சாவியை, மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலையொட்டி, ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி 17-ம் நூற்றாண்டில் முகலாய அரசர் ஒளரங்கசீப் காலத்தில் விஸ்வநாதர் கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்று கூறி, 1991-ம் ஆண்டில் இந்துக்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மசூதி வளாகத்தில் இருக்கும் சிருங்கார அம்மன் கோவிலில் இந்துக்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்டது. மேலும், ஞானவாபி மசூதி வளாகத்தின் அடித்தளப் பகுதி கடந்த 1993-ம் ஆண்டு முதல் பூட்டப்பட்டதோடு, அங்கு இந்துக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்து அமைப்பு சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அம்மனுவில், ஞானவாபி வளாகத்தின் அடித்தள பகுதியில் பூசாரி ஒருவர் வழிபாடு நடத்தி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, மசூதி வளாகத்தில் உள்ள சிருங்கார அம்மன் கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்து பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, ஞானவாபி மசூதிக்குள் தொல்லியல் துறை ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், ஆய்வுக்குத் தடை கோரி, அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் மசூதி தரப்பில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, தொல்லியல் துறை ஆய்வு உறுதி செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆய்வறிக்கையை தொல்லியல் துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். எனினும், ஆய்வறிக்கையை தற்போதைக்கு வெளியிட வேண்டாம் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர். இதனால், அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பது தற்போது வரை சஸ்பெண்ஸாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், ஞானவாபி மசூதிக்குள் இந்துக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட வழக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ், “ஞானவாபி வளாகத்தின் அடித்தள பகுதியை முறையாக பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அந்த பகுதியின் சாவியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறார்.