சபரிமலை ஐயப்பன் கோவிலில், வரும் 21-ஆம் தேதியுடன், 2023-24-க்கான மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் நிறைவு பெறுகிறது.
மண்டல – மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. 17-ஆம் தேதி முதல் மண்டல பூஜை தொடங்கி வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அன்றைய தினம் மண்டல பூஜை முடிவடைந்ததும் இரவு நடை சாத்தப்பட்டது.
இதை அடுத்து மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து, வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரிந்தது. மகர ஜோதியை இலட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.
இந்நிலையில், மண்டல – மகரவிளக்கு சீசன் நிறைவாக, இன்று காலை நெய் அபிஷேகம் நடைபெற்றது. இரவு அத்தாள பூஜைக்கு பின், மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து ஐயப்ப சுவாமி ஊர்வலம் சரம்குத்தி வரை சென்று மீண்டும் சன்னிதானம் வந்து சேரும்.
மீண்டும் 19-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, இரவு 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின், அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்ட பின் மாளிகப்புரம் கோவிலில், சடங்குகள் நடைபெறும்.
இதை அடுத்து, 21-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதைத் தொடர்ந்து, திருவாபரண ஊர்வலம் பந்தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் பின், காலை 6 மணிக்கு சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் சபரிமலை மேல்சாந்தி, பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் கோவில் சாவியை ஒப்படைப்பார். இத்துடன் 2023-2024-க்கான மண்டல-மகர விளக்கு காலம் நிறைவு பெறுகிறது.