மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி மற்றும் வாக்காளர் சரிபார்க்கக் கூடிய தாள் தணிக்கைத் தடம் உள்ளிட்ட தகவல்கள் தொடர்பாக, தேசிய அளவில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைக் காண பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்தும், வாக்காளர்கள் சரிபார்க்கக் கூடிய தாள் தணிக்கைத் தடம் குறித்தும் புதிய வாக்களர்களுக்கு தேசிய அளவில் செயல்முறை விளக்கம் அளிக்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது.
அந்த வகையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தாள் தணிக்கைத் தடம் (VVPAT) பற்றி புதிய வாக்காளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில், தேசிய அளவிலான விழிப்புணர்வுத் திட்டத்தை தலைமைத் தேர்தல் தொடங்கி இருக்கிறது.
அதன்படி, சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களைத் தவிர, மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த வகையில், 613 மாவட்டங்களில் அமைந்திருக்கும் 3,464 சட்டமன்றத் தொகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இதற்காக, மேற்கண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3,500-க்கும் மேற்பட்ட செயல்விளக்க மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதோடு, சுமார் 4,250 மொபைல் வேன்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில், அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அதேசமயம், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், இந்த விழிப்புணர்வுத் திட்டத்தின் வெளிப்பாட்டை மேம்படுத்த, சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள். தவிர, விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான அட்டவணை மாவட்டத் தேர்தல் அதிகாரிகளால் சட்டமன்ற தொகுதி/பிரிவு வாரியாக தயாரிக்கப்படுகிறது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்த செயல்விளக்க விழிப்புணர்வு பிரச்சாரம், தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் உள்ளூர் ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
பொது விளக்க நிகழ்ச்சிகள் உட்பட பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நோக்கங்களுக்காக EVM-களைப் பயன்படுத்துவதற்கான விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறையை ஆணையம் கொண்டிருக்கிறது.
மேலும், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு EVM-களை கையாளுதல் மற்றும் சேமிப்பதற்கான நெறிமுறைகள், டம்மி சின்னங்களுடன் FLC-OK EVM-களை மட்டுமே பயன்படுத்துதல், பயிற்சி மற்றும் விழிப்புணர்வின்போது உருவாக்கப்பட்ட VVPAT சீட்டுகளை அழிப்பது போன்றவை நிலையான இயக்க நடைமுறைகளில் அடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.