அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, பிரதமர் மோடி கடைபிடித்து வரும் 11 நாள் விரதம் குறித்து முக்கியத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட வகையில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் மகா கும்பாபிஷேக விழா வரும் 22 -ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, பாரதப் பிரதமர் மோடி 11 நாள் கடும் விரதம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 12 -ம் தேதி, 11 நாள் விரதத்தைத் துவங்கிய பாதரப் பிரதமர் மோடி, அன்றைய தினம் மஹாராஷ்டிரா மாநிலம் கோதாவரியில் உள்ள ராம்குந்திற்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர், பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோவிலுக்குச் சென்ற மோடி அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டார். அத்துடன், கோவில் வளாகத்தைச் சுத்தம் செய்தார்.
இதனைத் தொடரந்து, ஆந்திர மாநிலம், லேபக்ஷி பகுதியில் உள்ள வீரபத்ரர் கோவிலுக்குச் சென்ற மோடி, அங்கு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் 11 நாள் கடும் விரதம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதில், பிரதமர் மோடி வெறும் கட்டாந்தரையில் படுத்து உறங்குகிறார் என்றும், வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்ப்பதை தவிர்த்து வருகிறார் என்றும், ஒவ்வொரு நாளும் இளநீர் மட்டுமே அருந்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.