2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியின் இந்தியாவின் ஆய்வு நிலையம் அமைக்கப்படும் என்றும், இதற்கான சோதனை பணிகள் அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார்.
ஹரியானா மாநிலம் ஃபரீதாபாத்தில் சர்வதேச இந்திய அறிவியல் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோமநாத், ‘மாணவர் கண்டுபிடிப்பு விழா – ஸ்பேஸ் ஹேக்கத்தான்’ அமர்வில் உரையாற்றினார்.
அப்போது, விவசாயம் மற்றும் போக்குவரத்து, நீர் ஆதாரங்கள், உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு துறைகளில் விண்வெளி தொழில்நுட்பங்களின் முக்கியப் பங்கை வலியுறுத்தினார். மேலும், ‘புவன்’ போர்ட்டலின் முக்கியத்துவத்தையும், புதுமை மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கும் சாமானியர்களுக்கான பயன்பாடுகளையும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் காணொலி வாயிலாக உரையாடிய சோமநாத், பங்கேற்பாளர்களை விண்வெளி தொழில்நுட்பங்களில் முடிவில்லாத சாத்தியக் கூறுகளை ஆராய ஊக்குவித்தார். மேலும், கிராண்ட் ஃபைனாலில் பங்கேற்பாளர்களுடன் உரையாடி, 30 மணி நேர ஹேக்கத்தானின்போது உருவாக்கப்பட்ட பயன்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டார்.
தொடர்ந்து, விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டவர், சமூக முன்னேற்றம் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான இத்தகைய முன்முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அப்போது, 2023-ல் செயல்படுத்தப்பட்ட புதிய இஸ்ரோ கொள்கையிலிருந்து வெளிப்படும் வாய்ப்புகள் குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மேலும், இஸ்ரோ இனி ஒரு ரகசிய நிறுவனம் அல்ல. மாறாக, சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்று கூறினார். தொடர்ந்து, நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் மற்றும் விஞ்ஞான பாரதி ஆகியவற்றின் குழுக்களுடன் உரையாடியவர், விண்வெளி ஹேக்கத்தானின் வெற்றியில் அவர்களின் முக்கியப் பங்கை ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து, இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிலையத் திட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய சோம்நாத், “வரும் 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவின் ஆய்வு நிலையம் அமைக்கப்படும். இந்த பாரதிய விண்வெளி ஆய்வு நிலையத்துக்கான முதல் சோதனை அடுத்த ஆண்டில் தொடங்கும். இந்த விண்வெளி ஆய்வு நிலையத்தின் கட்டமைப்பு தொடா்பாக அண்மையில் ஆய்வு நடத்தினேன்.
இதன் தயாரிப்பு, சோதனைகள் குறித்து தொழில்துறையினருடன் இஸ்ரோ பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. தொடக்கத்தில், மனிதர்கள் யாருமின்றி இந்த விண்வெளி ஆய்வு நிலையம் செயல்படும். அதேபோல, வெள்ளி கிரகத்துக்கான திட்டம் ஏற்கெனவே திட்டமிட்டது. இதற்கான செலவுகளை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இஸ்ரோவுக்கான முக்கிய இலக்குகளை பிரதமர் நிர்ணயித்திருக்கிறார்.
ஆகவே, இந்த வெள்ளி கிரக ஆய்வுக்கான திட்டம் செலுத்தப்படும் காலத்தை முன்கூட்டியே அறிவிக்க இயலாது. இதுதவிர, அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களைச் சுமந்து செல்லும் வகையில் புதிய ராக்கெட்டை தயாரிக்கும் முயற்சியிலும் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது” என்றார்.