சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் 4-வது ஆண்டு “விங்ஸ் இந்தியா விருதுகள்” விழாவில், பெங்களூரு மற்றும் டெல்லி விமான நிலையங்கள் கூட்டாக இந்த ஆண்டிற்கான சிறந்த விமான நிலைய விருதைப் பெற்றன.
சிவில் விமானப் போக்குவரத்துறை சார்பில், பயணிகள் சேவையில் சிறந்து விளங்கும் விமான நிலையங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக “விங்ஸ் இந்தியா விருதுகள்” வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 4-வது ஆண்டாக “விங்ஸ் இந்தியா விருதுகள்” வழங்கும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது.
இதில், இந்த ஆண்டிற்கான சிறந்த விமான நிலைய விருதை பெங்களூரு மற்றும் டெல்லி விமான நிலையங்கள் கூட்டாக பெற்றிருக்கின்றன. இந்நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டு விங்ஸ் இந்தியா விருதுகள் 2024-ஐ வழங்கினார்.
மேலும், இந்த ஆண்டின் சிறந்த விமான சேவைக்கான விருதை விஸ்தாரா பெற்றது. சர்வதேச இணைப்புக்காக ஏர் இந்தியா அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது, அதேசமயம், பிராந்திய இணைப்புக்கான அங்கீகாரத்தை அலையன்ஸ் ஏர் பெற்றது. சஸ்டைனபிலிட்டி சாம்பியனாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிக்கப்பட்டது.
சிறந்த விமான சேவை வழங்குநருக்காக ஜி.எம்.ஆர். குழுமம் கௌரவிக்கப்பட்டது. மேலும், சிறந்த சரக்கு சேவைகளுக்காக ஸ்கைவேஸ் விமான சேவைகள், எரிபொருள் சேவைகளுக்காக இந்தியன் ஆயில் ஸ்கைடேங்கிங் பிரைவேட் லிமிடெட், ஏரோ அகாடமிக்கு ஜி.எம்.ஆர். குழுமம் ஆகியவை கௌரவிக்கப்பட்டன.
இவை தவிர, பல்வேறு வகையான சிவில் விமானப் போக்குவரத்தில் சிறந்து விளங்கியதற்காக விங்ஸ் இந்தியாவினால் பல்வேறு நிறுவனங்கள் கௌரவிக்கப்பட்டன.