சுமார் 400-500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தி இராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை விழாவுக்கான தருணம் வந்திருக்கிறது. இதற்காக மிகப்பெரிய சண்டைகள் நடந்தன என்று சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதி கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் பிரான் பிரதிஷ்டை விழா ஆகியவை வரும் 22-ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
இவ்விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து நாட்டிலுள்ள வி.வி.ஐ.பி.க்கள் சுமார் 10,000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மதத் தலைவர்கள், ஆதீனங்கள், சங்கராச்சாரியார்கள் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, அயோத்தி கோவில் வரலாறு என்பது நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டது என்று மதத் தலைவர்கள் பலரும் கூறிவருகின்றனர். மொகலாய அரசர் பாபர் காலத்தில் அயோத்தியில் இருந்து இராமர் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.
மேலும், இக்கோவிலை மீட்பதற்காக 500 ஆண்டுகளாக இந்துக்கள் போராடி வந்ததையும், இப்போராட்டங்களில் லட்சக்கணக்கானோர் உயிர் நீத்ததையும் விவரித்து வருகின்றனர். அந்த வகையில், சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதியும் இராமர் கோவில் வரலாறு குறித்து விவரித்திருக்கிறார்.
இதுகுறித்து சுவாமி சதானந்த சரஸ்வதி கூறுகையில், “சுமார் 400 முதல் 500 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் இராமர் கோவிலின் பிரான் பிரதிஷ்டா விழாவுக்கான தருணம் வந்திருக்கிறது. இது சாதாரணமாக நடந்து விடவில்லை.
தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகே இது நடக்கிறது. இதற்காக மிகப்பெரிய சண்டைகள் நடந்தன. போர்கள் நடந்தன. படையெடுப்பாளர்கள் எங்கள் மதத்தைத் தாக்கி எங்கள் மதத்தை நாசமாக்கினார்கள்” என்று கூறியிருக்கிறார்.